போடியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசும் ஓ.பன்னீர்செல்வம். 
தமிழகம்

பொய் வாக்குறுதிகளால் திமுக மீது மக்கள் கோபம்: போடியில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்வதால் திமுக மீது மக்கள் கோபமாக உள்ளனர் என்று போடியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தேனி மாவட்டம் போடியில் அதிமுக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்துப் பேசியதாவது: நான் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வேன் என்று கூறிய மு.க.ஸ்டாலின் அதைச் செய்ய வில்லை. ரத்து செய்வதற்கான வழிமுறைகள்கூட அவருக்குத் தெரியவில்லை.

கூட்டுறவு வங்கியில் அனைத்து விவசாயிகளுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறி, பெயரளவுக்கே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி போடியில் நான் பிரச்சாரம் செய்யவில்லை எனக் கூறி சென்றுள்ளார். ஆனால் போடி மக்களை சந்தித்து தேர்தலில் நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன்.

அதிமுகவின் பத்தாண்டு ஆட்சியில் தேனி மாவட்டத்தில் கால்நடை மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் திமுகவோ பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதால் திமுக மீது மக்கள் கோபமாக உள்ளனர்.

நீதி வழங்கக் கூடிய தராசாக உள்ள மக்கள் யாருடைய ஆட்சி நல்லாட்சி என்பதை மனதில் நிலைநிறுத்தி வாக்களியுங்கள். அதிமுகவுக்கு வாக்களித்து திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்டச் செயலாளர் சையதுகான், நகர செயலாளர் பழனிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT