கோபி அருகே கீழ் பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள இருகாலூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் (35). இவரது மனைவி வேதவள்ளி (30). இவர்களது மகள் பவித்ரா (16). வேதவள்ளியின் தங்கை அருணாதேவி, கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டுக்கு வேதவள்ளி தனது கணவர் சரவணக்குமார், மகள் பவித்ராவுடன் சென்றுள்ளார்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் சரவணகுமார், அவரது மனைவி வேதவள்ளி, மகள் பவித்ரா மற்றும் அருணாதேவியின் மகள் நர்மதா (11) ஆகிய 4 பேரும் கூடக்கரை கீழ் பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்றனர். கரையில் நின்றிருந்த பவித்ரா, எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் விழுந்துள்ளார். அதைப்பார்த்த தந்தை சரவணக் குமார், பவித்ராவை காப்பாற்ற வாய்க்காலில் குதித்தார்.
ஆனால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக சென்றதால் அவரால், பவித்ராவை மீட்க முடியவில்லை. தண்ணீர் அவரை யும் இழுத்துச் சென்றது. இருவரை யும் காப்பாற்ற வேதவள்ளி மற்றும் அவரது தங்கை மகள் நர்மதாவும் வாய்க்காலில் குதித்துள்ளனர். தண்ணீரின் இழுவை அதிகமாக இருந்ததால், 4 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அதைக்கண்ட மக்கள், கோபி தீயணைப்பு நிலையம் மற்றும் கடத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார், அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரை யும் தீவிரமாக தேடினர். நர்மதா, வேதவள்ளி, பவித்ரா ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சரவண குமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கடத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீயணைப்பு வாகனம் தாமதம்
வாய்க்காலில் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டது குறித்து முதலில் கோபி தீயணைப்புத் துறையினருக்கு மக்கள் தகவல் அளித்துள்ளனர். எனினும், 3 மணி நேரம் தாமதமாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். அதனால் ஆத்திர மடைந்த மக்கள் தீயணைப்புத் துறையினரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.