தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்நிலையமாக திகழ்கிறது. கேரளா, திருவனந்த புரம், கர்நாடகம், பெங்களூரு, மங்களூரு, மும்பை போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் விளங்கி வருகிறது.
கடந்த 1971-ம் ஆண்டு ஜோலார் பேட்டை நகராட்சி தோற்றுவிக்கப் பட்டது. அதன் பிறகு, 2004-ம் ஆண்டு 3-ம் நிலை நகராட்சியாகவும், 2010-ம் ஆண்டு முதல் இன்று வரை 18 வார்டுகளுடன் 2-ம் நிலை நகராட்சியாக உள்ளது.
ஜோலார்பேட்டை நகராட்சி தலைவர் பதவி எஸ்சி பெண்களுக்கு இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக வேட்பாளர்களே மாறி, மாறி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மற்ற கட்சியினரை பார்ப்பது குதிரை கொம்பாகவே உள்ளது என வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜோலார்பேட்டை நகராட்சியில் அதிமுகவும், திமுகவும் 18 வார்டு களில் நேரடியாக போட்டியிடுகின்றன. பாஜக 7 வார்டுகளிலும், பாமக கோட்டை என அழைக்கப்படும் ஜோலார்பேட்டையில் அக்கட்சியினர் வெறும் 6 வார்டுகளிலேயே போட்டியிடுகின்றனர். இதனால், பாமகவின் வாக்கு மற்ற வார்டுகளில் யாருக்கு விழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று அதிமுவுக்கு பேரதிர்ச்சியை அளித்தது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக அமைச்சராக வலம் வந்த கே.சி.வீரமணியை ஜோலார்பேட்டை நகர மக்கள் தோற்கடித்ததால் தற்போது நடை பெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று நகராட்சி நிர்வாகத்தை கைப்பற்ற பெரும் முயற்சியை அதிமுகவினர் எடுத்து வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியும் ஜோலார்பேட்டை நகராட்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.
18 வார்டுகளை கொண்ட இந்நகராட்சியில் 11,734 ஆண் வாக்ககாளர்களும், 13,052 பெண் வாக்காளர்கள், 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 24,787 வாக்காளர்கள் உள்ளனர். ஜோலார்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கோடியூர் பகுதியில் வாரச்சந்தைக்கு தனி இடம் ஏற்படுத்தி தரவேண்டும். 18 வார்டுகளிலும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறுகிய சாலைகளை அகலப்படுத்தி, தெரு மின்விளக்கு, கழிநீர்கால்வாய் வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்.
ஜோலார்பேட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். அரசு கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கொண்டு வர வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்து தர வேண்டும். ரயில் நிலையத்தை யொட்டி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓய்வறை அமைத்து தர வேண்டும்.
நகராட்சி முழுவதும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரயில் நிலையம், வாரச்சந்தை, கோடியூர் போன்ற முக்கிய சந்திப்பு களில் உயர்கோபுர மின்விளக்கு வசதிகள் செய்து தரவேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கும் வாக்காளர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வோம் என்கின்றனர்.