தமிழகம்

வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்றக் கோரி அமமுக வேட்பாளர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தை வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கருக்கு மாற்றக் கோரி அமமுக வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தை வாலாஜாபேட்டையில் இருந்து சோளிங்கருக்கு மாற்றக் கோரி நகராட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சோளிங்கர் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாலாஜாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை மாற்றக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மனுதாரரோ, நீதிமன்றமோ தீர்மானிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும், ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT