தமிழகம்

’தாராளம்’ காட்டும் முக்கியக் கட்சிகள் - புலம்பும் திருமங்கலம் சுயேச்சை வேட்பாளர்கள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ”திருமங்கலம் நகராட்சியில் வாக்காளர்களை கவர முக்கியக் கட்சிகள் தாராளம் காட்டி வருகின்றனர்” என்று சுயேச்சை வேட்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக செல்வாக்குள்ள உள்ளாட்சிப்பதவியாக திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவி பார்க்கப்படுகிறது. இந்த நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அதிமுக 27 வார்டுளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. திமுக 23 வார்டுகளிலும், மற்ற வார்டுகளில் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அதன் கூட்டணி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அமமுக 13 வார்டுகளிலும், பாஜக 26 வார்டுகளிலும், தேமுதிக 4 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற கட்சிகள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வார்டுகளில் 111 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில், அக்கட்சியின் நகராட்சி தலைவர் வேட்பாளராக முருகன் முன்நிறுத்தப்படுகிறார். அதிமுக சார்பில் நகரச் செயலாளர் விஜயன் முன்நிறுத்தப்படுகிறார். இயல்பாகவே திருமங்கலம் நகராட்சியைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் சரிசமமான செல்வாக்குள்ள கட்சியாக பார்க்கப்படுகிறது. ஆளும்கட்சி என்பதால் இந்த நகராட்சி தேர்தலில் திமுகவுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 'திமுகவின் பிரச்சாரத்திற்கும், பணப்பட்டுவாடாவுக்கும் இணையாக அதிமுகவும் சரியான போட்டிக் கொடுத்து வருகிறது. நாளை 17-ம் தேதியுடன் பிரச்சாரம் ஒய்வதால் இன்று முதல் திமுக, அதிமுக கட்சிகள் போட்டிப்போட்டு பணம் பட்டுவாடா செய்யத் தொடங்கிவிட்டனர்' என்று சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் புலம்பி வருகின்றனர்.

”ஏற்கெனவே 2009-ம் ஆண்டு நடந்த திருமங்கலம் இடைத்தேர்தல், தமிழகத்தில் அதற்கு பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதை நியாயப்படுத்தும் வகையிலும், அதிகளவு பணம் கொடுத்தால் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்ற திடமான நம்பிக்கையையும் அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தால் தற்போது வரை இந்த இடைத்தேர்தல் பார்முலாவை தடுக்க முடியவில்லை. தற்போது அதே திருமங்கலம் சட்டசபை தொகுதியில் நடக்கும் திருமங்கலம் நகராட்சியில் இடைத்தேர்தல் பார்முலா அடிப்படையில் திமுக, அதிமுக கட்சிகள் பணம் பட்டுவாடாவை தொடங்கிவிட்டன” என்று பின்புலத் தகவல்களுடன் சுயேச்சை வேட்பாளர்கள் கவலை பகிர்ந்துள்ளனர்.

இன்னும் சிலரோ, ”இரு கட்சிகளும், வார்டுகளில் ரூ.1000 பட்டுவாடா செய்யத் தொடங்கிவிட்டனர். இன்னும் அனைத்து வார்டுகளுக்கும் பணம் பட்டுவாட முழுமையடையவில்லை. அதுபோல், மற்ற கட்சிகளிலும் வசதிப்படைத்த வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளிலும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அதனால், ஒவ்வொரு வார்டிலும் திமுக, அதிமுக கட்சிகளை தாண்டி வேட்பாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் தாண்டிதான் எங்கள் வெற்றி வாய்ப்பு இருக்கிறது” என்கின்றனர் சுயேச்சை வேட்பாளர்கள்.

SCROLL FOR NEXT