தமிழகம்

திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் தொடரும்: தமிழகத்தில் இன்று முதல் நர்சரி பள்ளி திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமலாகிறது. குறிப்பாக, பொது நிகழ்ச்சிகள், திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்தது. இதையடுத்து, ஜன6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, ஜன.9, 16, 23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், கரோனா பாதிப்பு குறைந்ததாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. வழிபாட்டுத்தலங்களில் வார இறுதி நாட்களில் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.

மேலும், பிப்.1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், பிப். 15-ம் தேதி வரை 16 வகையான செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இக்கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. இதற்கிடையில் கடந்த பிப்.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து, கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிப்.16 முதல் மார்ச் 2-ம் தேதி வரை இந்த ஊரடங்கு தளர்வுகள் அமலில் இருக்கும். மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள பொதுமக்கள் பங்கேற்கும் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்வுகளில் 200 பேருக்கு மிகாமலும், இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர, கரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்ப பெறப்படுகிறது. மேலும், மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள், கண்காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

பொதுமக்கள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சோப்பு அல்லது சானிடைசர்கள் பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுதல், கடைகளில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT