நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆள் பலம், பண பலம் மற்றும் அதிகார பலத்தை எதிர்த்து பாஜக களம் காண்கிறது என அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக சார்பில் திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிடும் 34 பெண் வேட்பாளர்களுடன் வானதி சீனிவாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் மத்திய அரசின் திட்டங்களை எந்த கையூட்டும் இல்லாமல் எப்படி மக்களுக்கு கொண்டு சேர்க்க போகிறோம் என்பதைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறோம். இத்தேர்தலில் ஆள் பலம், பண பலம் மற்றும் அதிகார பலம் ஆகியவற்றை எதிர்த்து தான் பாஜகவினர் களம் காண்கிறோம்.
இந்தியாவில் சமூக நீதிக்கான தேவை எங்கும் ஏற்படவில்லை. நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் மத்திய அரசின் அதிக நிதியை பெறும் மாநிலமாக உள்ளது. சமூக நீதிக்கு பாஜக அரசால் என்ன பிரச்சினை வந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் பிரதமராக இருப்பதற்கு முதலில் ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும். அது தான் உண்மையான சமூக நீதி.
அரசியல் செய்வதற்காக திமுக எடுத்த ஆயுதம் நீட். தற்போது அந்த ஆயுதம் அவர்களையே தாக்கத் தொடங்கியுள்ளது. மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே மேற்கு வங்க ஆளுநர் சட்டப்பேரவையை முடக்கினார். முழு விவரம் தெரியாமல் மேற்கு வங்க ஆளுநரைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்கிறார். முதல்வரின் புரிதல் இவ்வளவுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கண்டனம்
முன்னதாக வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி, தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதி கேட்டு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம் முன்பு நேற்று முன்தினம் அறப்போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து நள்ளிரவு வரை அலைக்கழித்துள்ளனர். ஏபிவிபி அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. அமைதியான வழியில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.