முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், வன விலங்குகளின் தேவைக்காக குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர்மாத இறுதியிலிருந்து பனிக் காலம் தொடங்கும். இந்த நேரத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உறைபனி பொழியும். இதனால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல்வெளிகள் கருகிவிடும். மேலும், பனியிலிருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்க, பனி பாதுகாப்பு நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். தேயிலை செடிகளின் மேல் தென்னங்கீற்றுகள், வைக்கோல் போட்டு செடிகளை பாதுகாப்பது வழக்கம்.
இந்த ஆண்டு, பனிப்பொழிவு தாமதமாக கடந்த மாதம்தான் தொடங்கியது. கடும் உறை பனிப்பொழிவு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் ஜனவரி மாதம் இறுதியில் பனிப்பொழிவு குறையும் நிலையில், இந்தாண்டு பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பனியின் தாக்கத்தால் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்துவிட்டன. தேக்கு மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து, எலும்புக்கூடுகளாக காட்சியளிக்கின்றன. கடும் வறட்சி காரணமாக முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் தாவரங்கள் இல்லாததாலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும், வனத்தீ அபாயமும் உள்ளதால், 500 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்புக் கோடுகளை ஏற்படுத்தும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், முதுமலை வனப்பகுதியில் குட்டைகள் கட்டப்பட்டுள்ளன. டிராக்டர் மற்றும் லாரிகள் மூலமாகதண்ணீர் கொண்டு, அந்த குட்டைகளை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், விலங்குகளுக்கு உப்பு கொட்டப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, ‘‘முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி, தெப்பக்காடு, சீகூர், சிங்காரா, மசினகுடி வனச்சரகங்களிலுள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு குட்டைகளில் நிரப்பப்படுகிறது. தண்ணீர் தீர்ந்ததும், மீண்டும் தண்ணீர் நிரப்பப்படும். எந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேவை இருக்கிறது என வன ஊழியர்கள் கூறுகிறார்களோ, அப்பகுதிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படும்’’ என்றனர்.
முதுமலையில் வறட்சி நிலவுவதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சொடி காணப்படுகிறது.