சென்னை மருத்துவக் கல்லூரியில் நேற்று முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்கிவைத்துப் பேசினார் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கட்டாயமாக கரோனா நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறைச் செயலர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார்மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் மற்றும் அடிப்படை வகுப்புகள் நேற்று தொடங்கியது.

அறிமுக வகுப்புகள் குறித்த கையேட்டை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கினார். மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 6,658 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்குரிய அடிப்படை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் குறித்த புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றியதால், கரோனா தொற்று குறைந்துள்ளது. கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் படுக்கைகளில் 2 ஆயிரத்து 800 பேர் மட்டுமே உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 440-ஆக குறைந்துள்ளது.

வரும் காலத்தில், மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படக் கூடும். அதனால், சில மாதங்களுக்கு அரசின்நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்னும் 1.13 கோடிபேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட 40 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசிகூட போட்டுக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் சமுதாயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

தமிழகத்தில் அடுத்த 15 நாட்களுக்குள் ஆய்வு மேற்கொண்டு, தேவையில்லாத கரோனா கவனிப்புமையங்கள் படிப்படியாக குறைக்கப்படும். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவார்கள். கரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல. கட்டுப்படுத்தப்பட்ட நோய் என்றே உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT