மதுரை ஆனையூரில் நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி எம்எல்ஏ. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

சட்டப்பேரவையை முடக்கினால் திமுக 200 இடங்களில் வெல்லும்: மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி பேச்சு

செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆனையூர், ஓபுளாபடித்துறையில் நேற்று பிரச்சாரம் செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்எல்ஏ பேசியதாவது:

திமுக ஆட்சியில் 10 கோடி தடுப்பூசி போட்டுள்ளோம். முதல்வரும், அமைச்சர்களும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி கரோனா 2 அலையை முறியடித்துள்ளோம். நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் முதலிடத்தில் இருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றனர். அந்தச் சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், கரோனா நிவாரணத் தொகை வழங்கினார். பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ருபாய் குறைத்தார். மகளிருக்கு இலவசப் பேருந்து வசதி செய்து கொடுத்தார். இதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவார்.

முன்னாள் முதல்வர் பழனிசாமி கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவையை முடக்கப் போவதாகப் பேசி வருகிறார். முடக்கித்தான் பாருங்களேன்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் 159 இடத்தில் வெற்றிபெற வைத்தார்கள். நீங்கள் சட்டப்பேரவையை முடக்கினால், பின்னர் நடக்கும் தேர்தலில் தமிழக மக்கள் 200 இடங்களுக்கு மேல் திமுகவை வெற்றிபெற வைப் பார்கள்.

உதயநிதி கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து காணாமல் போய்விட்டார் என பழனிசாமி சொல்லியுள்ளார். என் மீது ஆசை வைத்து என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார். டேபிளுக்கு மேல் தேடினால் என்னைக் கண்டுபிடித்துவிடலாம். டேபிளுக்கு கீழ் தேடினால் எப்படி நான் கிடைப்பேன். கூவத்தூரில் டேபிளுக்குக்கீழ் சென்று சசிகலா அம்மா காலைப் பிடித்து நீங்கள் ஆட்சிக்கு வந்தது போல், நாங்கள் ஆட் சிக்கு வரவில்லை. மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வந்துள்ளோம். பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலின் சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார்.

உள்ளாட்சிகளில் ஆளுங்கட்சி வென்றால்தான் நலத்திட்டங்கள் விரைவில் நடைபெறும். எனவே திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில்அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாக ராஜன், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி, எம்.மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி பேசுகையில், தமிழகத்தில் 2 அமாவாசை யார் என்று மக்களுக்கு தெரியும். திமுகவினர் வீடு வீடாகச் சென்று சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி முன்னிலை வகித்தனர். ப.வேலுச்சாமி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் குமார், எஸ்.காந்திராஜன், மாநக ராட்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT