சுதர்சன சபா (பழைய படம்). 
தமிழகம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்த 95 ஆண்டுகள் பழமையான சுதர்சன சபா கட்டிடம் இடிப்பு

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூரில் இருந்த 95 ஆண்டுகள் பழமையான சுதர்சன சபா நாடக மன்றம் நேற்று இடித்து அகற்றப்பட்டது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 40,793 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் 1927-ம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு, சுதர் சன சபா என்ற நாடக மன்றம் கட்டப் பட்டது. இந்த சபாவில் நாடகம், கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற் பொழிவுகள், புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

முதலில் ராமநாதன் செட்டியார் என்பவரால் நிர்வகிக்கப்பட்ட வந்த இந்த சபாவுக்கு, பின்னர் ஆர்.கே.ராமநாதன் என்பவர் செயலாளராக பொறுப்பேற்றார். அதன் பின்னர், சபா வளாகத்தில், மாநக ராட்சி அனுமதியின்றி மதுக் கூடம், ஹோட்டல், பேக்கரி, செல் போன் கடை ஆகியவற்றை கட்டி உள்வாடகைக்கு விட்டிருந்தார்.

மேலும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை யும் செலுத்தவில்லை. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற் பட்டது.

இதையடுத்து, கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் ஆகி யோர் இங்கு 4 மாதங்களுக்கு முன் கள ஆய்வு செய்தனர். அதில், அனு மதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு, உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப் பாளர்களாக கருதி மதுக்கூடம், உணவகம் நடத்தியவர்களுக்கு முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழக்கப்பட்டது.

அதேபோல, சுதர்சன சபா நிர்வாகம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டி வரியினங்களை செலுத்தாமல் இருந்ததால், ஆக்கிர மிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975-ன் படி, தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து பிப்.1-ம் தேதி மாநகராட்சி சார்பில், சபா இடத்தை கையகப்படுத்தி, அதற்கான நோட்டீஸ் சபாவின் கதவருகே ஒட்டப்பட்டது.

மேலும், கையகப்படுத்திய இடத்தில் உள்ள பொருட்களை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ள ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சுதர்சன சபா வளாகத்தில் இருந்த அனுமதி யின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் நேற்று முன்தினம் இடித்து அகற் றப்பட்டன.

அதன்தொடர்ச்சியாக, சுதர்சன சபா கட்டிடம் பாழடைந்து இருந்ததாக கூறி, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, அந்த கட்டிடத்தை பொக்லைன் மூலம் மாநகராட்சியினர் நேற்று இடித்து தரைமட்டமாக்கினர்.

சமூக ஆர்வலர்கள் வேதனை

சுதர்சன சபாவில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களும், கருணாநிதியின் நாடகங்கள், அரசியல் பொதுக் கூட்டங்கள் உள்ளிட்டவை நடைபெற்றுள்ளன. அதை இடித்து அகற்றியது சமூக ஆர்வலர்கள் மற்றும் திராவிட பற்றாளர்களிடையே வேதனையே ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் நகர் மன்றத் தலைவர் சி.இறைவன் கூறும்போது, “பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற திராவிட முன்னோடிகள், நாடகங்கள் மூலம் பல்வேறு சமூக கருத்துகளை பொதுமக்களிடம் இந்த நாடக மன்றத்தில் நடித்தும், பேசியும் பரப்பினர். பழமையான இந்த சபாவை புதுப்பித்து பாதுகாத்திருக்கலாம், ஆனால், அதை இடித்து தரைமட்டமாக்கியது வருத்தமளிக்கிறது. திராவிட பற்றாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT