ராணிப்பேட்டை நகரின் இழந்த அடையாளத்தை புதிய நகராட்சி நிர்வாகம் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரட்டை நகரங்கள் என வாலாஜா, ராணிப்பேட்டை வர்ணிக்கப்படுகிறது. இதில், ராணிப்பேட்ட நகரம் சுமார் 300 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டது. ஆற்காடு நவாபுகளுக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு மீது நவாப் சதாத்துல்லாகான் போர் தொடுத்தார். இதில், வீர மரணம் அடைந்த ராஜா தேசிங்கின் இறப்பு செய்தியை கேட்ட அவரது மனைவி ராணிபாய் உடன் கட்டை ஏறினார். அவர்களின் நினைவாக ராணிப்பேட்டை பாலாற்றங்கரை ஓரத்தில் ராஜா தேசிங்கு, ராணிபாய்க்கு பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் எழுப்பப்பட்டது. மேலும், ராணிபாய் நினைவாக ராணிப்பேட்டை நகரம் 1771-ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட் டது. அதன் பிறகு ஆங்கிலேயர்களின் முக்கிய ராணுவ கேந்திரமாக ராணிப்பேட்டை நகரம் இருந்துள்ளது.
ராணிப்பேட்டை நகரம் 30 வார்டுகளுடன் 41,689 வாக்காளர்களை கொண்டுள்ளது. 1959-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை நகராட்சி, 1978-ம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர், 1998-ம் ஆண்டு, முதல் நிலை நகராட்சியாகவும், கடந்த 2008-ம் ஆண்டு, முதல் தேர்வு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது.
மாவட்டத்தின் தலைநகரான நகராட்சியை கைப்பற்ற திமுக, அதிமுக இடையில் கடுமையான போட்டி தொடங்கியுள்ளது. ராணிப்பேட்டை நகராட்சியை கைப்பற்ற மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் ஆர்.காந்தி மேற்பார்வையில் திமுகவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.
நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக பேருந்து நிலையம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ராணிப்பேட்டை, வாலாஜா நகராட்சிக்கு இடையில் உள்ள பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஞ்சி ஏரிக்கு நிர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால் அதை மீட்டு, ஏரிக்கரையில் பூங்காவுடன் கரை பகுதியில் நடைபயிற்சிக்கான பாதையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
நகரின் கழிவுநீர் அனைத்தும் பாலாற்றில் கலக்கும் வகையில் உள்ளதால் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுடன் பற்றாக்குறையான குடிநீர் விநியோகத்துக்கு பதவி ஏற்கப்போகும் நகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
நகராட்சி வார சந்தையில் பொதுமக்கள் வியாபாரிகளுக்காக குடிநீர் வசதியுடன் கூடுதல் கழிப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், எம்.பி.டி சாலையில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
நகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருப்பது நகரின் பெயருக்கு அடையாளமாக இருக்கும் ராஜா, ராணியின் கல்லறை பாழடைந்த பராமரிப்பு இல்லாத பகுதியாக உள்ளது. தனியார் வசம் இருக்கும் இந்த பகுதியை மீட்டு நகரின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்புடன் கூடிய கோரிக்கையாக உள்ளது.