கோவை: கோவையில் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, சுயேச்சை வேட்பாளர் மண்வெட்டியை கொண்டு கால்வாயில் இறங்கி தேங்கி நின்ற கழிவு நீரை சுத்தம் செய்து அசத்தியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப் 19-ம் தேதி நடைபெறவுள்ளதால், அனைத்து மாநகராட்சிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாவட்டம் சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சங்கரன் கோவில் 32-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதி மக்களிடம் தனது மனைவியுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேட்பாளர் மகேஷிடம், மக்கள் நீண்ட நாட்களாக கழிவு நீர் அகற்றப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.
உடனடியாக அப்பகுதி மக்களிடம் மண் வெட்டியை பெற்று நேரடியாக கழிவுநீர் கால்வாயில் இறங்கி தேங்கி நின்ற கழிவுகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார். பிரச்சாரத்திற்கு வந்த சுயேச்சை வேட்பாளர் நேரடியாக கால்வாயில் இறங்கி கழிவுகளை அகற்றிய சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.