தமிழகம்

5,000 இ-சேவை மையங்களில் விரைவில் அறிமுகம்; ஆதார் மூலம் கட்டணம் செலுத்தும் முறை: தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர் தகவல்

மனோஜ் முத்தரசு

சென்னை: இ-சேவை மையங்களில் ஆதார் மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மின்னணு சேவைகளை அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொது மக்களுக்கான பொது இணையதளம் மூலமாக வழங்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் 580 உட்பட பல்வேறு முகமைகளின் கீழ் 10,818 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய் துறையின் கீழ் வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ் உட்பட 40சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட 22 துறைகளின் 130-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை 6.5 கோடிக்கும் மேலான பரிவர்த்தனைகள் இ-சேவை மூலம் நடந்துள்ளன. சேவைகளுக்கு ஏற்றவாறு ரூ.15 முதல் ரூ.120 வரை கட்டணம் பெறப்படுகிறது. கட்டணம் குறைவாக இருந்தாலும், சில இ-சேவை மையங்களின் பணியாளர்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் பெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டும், இ-சேவை மையத்தில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாகவும் ‘ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் முறை’என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் முதன்மைசெயல் அலுவலரும், இயக்குநருமான கே.விஜயேந்திர பாண்டியன் கூறியதாவது: இ-சேவை மையங்களில் வெளிப்படைத்தன்மையுடன் பணமில்லா சேவைகளைப் பெற ஆதார்மூலமாக கட்டணம் செலுத்தும்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இ-சேவை மையத்தில் சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்த, அங்கு இருக்கும் கைரேகை கருவியில் (Biometric) நமது கைரேகையை பதிவிட வேண்டும். அப்போது ஆதார் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கில் இருந்து சேவைக்கான கட்டணம் மையத்துக்கு வந்துவிடும்.

இந்த திட்டம் முதல்கட்டமாக 600 சேவை மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஓரிரு வாரங்களில் தமிழகம் முழுவதும் 5,000 சேவை மையங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT