முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்ற ஏபிவிபி அமைப்பினர். 
தமிழகம்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் | முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயற்சி: பாஜக மாணவர் அமைப்பினர் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு

செய்திப்பிரிவு

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் வீட்டை பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட முயன்றதால் மாணவர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியை அடுத்த மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2படித்து வந்தார். விடுதி அறையில் தங்கி படித்த அவர் கடந்தமாதம் திடீரென வி‌ஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார்.

மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாணவியின் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, மாணவி தற்கொலை வழக்கின் விசாரணை, சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், மாணவி மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற கோஷத்துடன் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் நேற்றுசென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ளமுதல்வரின் வீட்டை முற்றுகையிடுவதற்காக, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்றுபிற்பகல் 2 மணி அளவில் திடீரெனஅந்த சாலைக்கு வந்தனர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், அவர்களை சாலைக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால் போலீஸாரின் தடுப்புகளை மீறி மாணவர்கள் முதல்வர் வீட்டை நோக்கி ஓடினர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீஸார், வலுக்கட்டாயமாக அவர்களை வாகனங்களில் ஏற்ற முயன்றனர்.

இதனால், போலீஸாரை கண்டித்து சாலையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர். சாலையில் அமர்ந்துகொண்டு, ‘மாணவி மரணத்துக்கு நீதி வேண்டும், தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று கோஷம் எழுப்பினர். அரசுக்கு எதிராகவும், போலீஸாரை கண்டித்தும் கோஷமிட்டனர்.

பின்னர் கூடுதல் போலீஸார்வரவழைக்கப்பட்டு போராட்டம்நடத்திய மாணவ, மாணவிகளைபோலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர். இதனால் போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஏபிவிபி அமைப்பின் தலைவர் திரிபாதி, 17 பெண்கள் உட்பட 35 பேரை போலீஸார் கைது செய்தனர். அனைவரும் அருகே இருந்த திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களின் முழு விவரங்களும் பெறப்பட்டன. பிறகு, இரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT