தேசியக்கட்சி எனும் அந்தஸ்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள் இழந்துவிட்டன என்று திருப்பூர் பிரச்சாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜை ஆதரித்து, திருப்பூர் செரங்காட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் 8 முனை போட்டி நிலவுகிறது. ஆனால் பிரதான போட்டி மும்முனை தான். அதில் பாஜகவும் உள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் வீடு, வீடாக கொண்டு சேர்க்கும் நோக்கில் பாஜக தனித்து போட்டியிடுகிறது.
அம்ருத், பாலம், ஸ்மார்ட்சிட்டி திட்டம், பாதாள சாக்கடை என பல்வேறு திட்டங்களும், மத்திய அரசை சார்ந்த திட்டங்களாகும்.
தமிழகத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிபோல கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை உள்ளது. திமுக அதற்கு ஆக்சிஜன் தருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தால், மாநில அரசும் எதுவும் கொடுக்காது. மத்திய அரசும் எதுவும் கொடுக்காது. எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்கை செலுத்தி வீணடிக்க வேண்டாம். தேசியக்கட்சி எனும் அந்தஸ்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள் இழந்துவிட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உடனிருந்தார்.
காங்கயம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களிமேட்டில் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். திருப்பூர் சாலையில் இருந்து பழநி சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றபடி அவர் வாக்கு சேகரித்தார்.