உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஐந்து லாந்தர், காந்தல் பென்னட் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராசா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் அவர் பேசும்போது, "கடந்த மக்களவைத் தேர்தலின்போது வட மாநிலங்களில் மோடி அலை வீசியபோதும், தமிழகத்தில் வீசவில்லை. மாறாக, 39 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை அழிக்க முயற்சி செய்யும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தை பார்த்துகூட பிரதமர் மோடி அஞ்சுவதில்லை; ஆனால், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி.-க்கள் 39 பேரை பார்த்து அஞ்சுகிறார்.
பிரதமரை கட்டுப்படுத்தும் தகுதி தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.-க்களுக்கு உள்ளது. கேள்வி நேரத்தின்போது, மக்களவைக்கு பிரதமர் மோடி வருவதே இல்லை. தமிழகத்தில் கடந்த ஆட்சியில் முறையாக கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளாததால், போதிய ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதிகள் இன்றி 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 3 மாதத்துக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் இருந்தபோது, அப்போது முதல்வராக இருந்த பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடி ஆகியோர் வெளியில்கூட வரவில்லை. ஆனால், ஸ்டாலின் வெளியில் வந்து மக்களை சந்தித்து, ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்தார். கரோனா சிகிச்சை மையத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விரைவில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படும். இன்னும் நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஆட்சி உள்ளது. எனவே, படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றுவார். பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் எந்த கேள்வி கேட்கவும் தகுதி இல்லாதவர்கள்" என்றார்.
மாவட்ட திமுக துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோ, முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.