சேலம் அடுத்த பனமரத்துப்பட்டி வாரச்சந்தையில் கூடியிருந்த பொதுமக்களிடம் திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சியில் இல்லாதபோது கருணாநிதியும், ஸ்டாலினும் எதிர்க்கட்சியினர் குறித்து தனிநபர் விமர்சனத்தில் ஈடுபட்டதில்லை. ஆனால், ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்த பழனிசாமி பதவி இல்லாத 6 மாதத்தைக் கூட தாங்க முடியாமல் பதவி வெறிக்காக ஏதேதோ பேசி வருகிறார்.
பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயண சலுகை, மகளிர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர், தற்போது குடும்ப மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற உள்ளார். மக்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலின் பக்கம் திரும்பி விட்டனர். அதிமுக-வுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக-வின் கோட்டை என்பதை உடைத்து, திமுக வேட்பாளர்கள் 90 சதவீதம் பேர் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். சேலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.