தமிழகம்

கரோனா தடுப்பு பணியின்போது தொற்று பாதித்து உயிரிழந்த அரசு மருத்துவர்களுக்கு மாநில அரசு எந்த நிதியுதவியும் வழங்காது என்பதா? - மத்திய அரசின் அறிக்கையை வெளியிட போராட்டக்குழு கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி மட்டுமே போதுமானது மாநில அரசு எந்த இழப்பீடும் வழங்காது என்பதற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் நிதியுதவி மட்டுமே போதுமானது என மாநில அரசை கேட்டுக்கொண்ட அறிக்கையை வெளிப்படையாக அரசு வெளியிட வேண்டும் என்றும் போராட்டக்குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்களின் குடும்பத்தினர் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்டோருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு தொகை வாங்கியவர்களுக்கு, மாநில அரசின் இழப்பீடு தொகையை வழங்கக் கூடாது என மத்திய அரசே அறிவுறுத்தி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை மாநில அரசு விரைவில் வழங்கும் என அமைச்சர் உறுதியளித்தார். தற்போது மாநில அரசு நிவாரணம் தராது என அமைச்சர் தெரிவித்திருப்பது, அதிர்ச்சியாக உள்ளது.

முந்தைய ஆட்சியில் கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் அறிவித்து விட்டு 2 பேர் குடும்பத்துக்கு மட்டும் ரூ.25 லட்சம் கொடுத்தார்கள். புதிய ஆட்சியில் உயிரிழந்த 8 அரசு மருத்துவர்களில் ஒருவருக்கு மட்டுமே மாநில அரசிடமிருந்து நிவாரணம் தரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமே அரசு மருத்துவர்களுக்கு பணிக்காலத்தில் உரிய ஊதியம் மறுக்கப்படுவது மட்டுமன்றி கரோனாவால் உயிரிழந்தாலும் மாநில அரசு எதையுமே தருவதில்லை. எதிர்கட்சித் தலைவராக இருந்த முதல்வர், கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு, ரூ.1 கோடி நிவாரணம் தர வேண்டுமென தெரிவித்தார். ஆனால் உயிர் நீத்த அரசு மருத்துவர்களுக்கு, தற்போது மாநில அரசு எதையுமே தராதது எந்த வகையில் நியாயம் என்று மனச்சாட்சியோடு நினைத்து பார்க்க வேண்டும்.

மத்திய அரசு நிதி உதவி செய்யும் நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் பட்டியலை சுகாதாரத் துறை இதுவரை வெளியிடாதது ஏன். மத்திய அரசின் நிதியுதவி மட்டுமே போதுமானது என்று மத்திய அரசு, மாநில அரசை கேட்டுக்கொண்ட அறிக்கையை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் உயிர் நீத்த மூன்று மருத்துவர்களில் முதல் இருவருக்கு ரூ.25 லட்சம் தன் பங்காக மாநில அரசு கொடுத்து உதவியதே. அது எந்த வகையில் கொடுக்கப்பட்டது. 19 ஆயிரம் அரசு மருத்துவர்கள் சார்பாக கேட்கிறோம். சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT