காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாம் தமிழ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கான அரங்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுகவில் வாக்குகளுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், அதன் பின்னர் அவற்றை சரிவரச் செய்யாமல் இருப்பதும் நடந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி மக்களுக்காகத் தொடர்ந்து தனித்து தேர்தலைச் சந்தித்து வருகிறது. ஒருநாள் மக்கள் எங்கள்கட்சியை முழுமையாக ஏற்பர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றால் அவர்கள் மேயர், தலைவர் பதவிகளுக்குப் போட்டியிடுவார்கள். குறைந்த அளவில் வெற்றிபெற்றால் அவர்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்து செயல்பட மாட்டார்கள்.
ஆளுநர்களின் அதிகார மீறல்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டிப் பேசினால் அதை நாங்கள் வரவேற்போம். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்தவரை ஆளுநர் பதவி அதிகாரம் இல்லாத பதவியாக இருந்தது. அதற்கு அடுத்து வந்தவர்கள் தங்களுக்கு உரிய அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்தாததால் ஆளுநர் சென்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கிறார்.
குஜராத்தில் ஒரு மீனவர் கொலை செய்யப்பட்டால் கூட இந்திய அரசு அதிக அழுத்தம் கொடுக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆளும் கட்சியினரால் மற்ற வேட்பாளர்கள் மிரட்டப்படுகின்றனர். எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் இளைஞர்களும் அதிக மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.