தஞ்சாவூரில் சுதர்சன சபா வளாகத்தில் திமுக பிரமுகரால் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா 1927-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த சபா ஆண்டு வாடகை அடிப்படையில் தனியாருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இந்த சபாவை திமுக பிரமுகரான ஆர்.கே.ராமநாதன் என்பவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்து வந்தார். இந்த சபாவில், காலப்போக்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைந்தது.
மேலும், சபா வளாகத்தில் குத்தகை விதிமுறையை மீறி மதுபானக் கூடம், பேக்கரி கடை, செல்போன் கடை, உணவகம் ஆகியவை கட்டப்பட்டு, உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தன. இதன் மூலம் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, உணவகம், மதுபானக் கூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவை சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டன. மேலும், சுதர்சன சபாவை மாநகராட்சி கையகப்படுத்தியது.
இந்த சுதர்சன சபா அமைந்துள்ள இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், குத்தகைக்கான வாடகையும் ரூ.20 கோடி வரை நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், எஸ்பி ரவளிப்பிரியா ஆகியோர் முன்னிலையில், சுதர்சன சபாவில் இருந்த மதுபானக் கூடம், உணவகம், செல்போன் கடை, பேக்கரி ஆகியவை நேற்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.