தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக அரசு செய்யும் நல்லதிட்டங்களை மக்களிடம் கொண்டுவந்து சேர்க்க உள்ளாட்சியில் சரியான மக்கள் பிரதிநிதிகள் வேண்டும்.
அரசுடனும், முதல்வருடனும் ஒத்துப்போகக்கூடிய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால் மக்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். தவறான நபர்கள் உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் அரசின் திட்டங்களை மக்களுக்குகொண்டுவந்து சேர்க்க மாட்டார்கள். அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படக்கூடிய திமுக பிரதிதிநிதிகளை உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எல்லா விதங்களிலும் தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. நிறைய தொழில் முதலீடுகள் வருகின்றன.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் செண்பக கால்வாய் திட்டம், இரட்டைகுளம் கால்வாய் திட்டம் போன்றவற்றுக்கு நிதிஒதுக்கப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. சுரண்டை திமுகஆட்சியில் நகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. சுரண்டையில் இருந்து ஊட்டி, சென்னைக்கு பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இவ்வாறு கனிமொழி பேசினார்.