தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக சார்பில் முதல்கட்டமாக 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பாஜக மாநில மையக் குழு கூட்டம் கடந்த 4-ம் தேதி சென்னையில் நடந்தது. பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்சி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அமாவாசை என்பதால் பட்டியலை வெளியிட பாஜக முடிவு செய்துள்ளதாக அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரவித்தார்.
முதல் பட்டியலில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தொகுதி இறுதி செய்யப்படவில்லை. எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற குழப்பத்தில் இருந்த அவர், தனது வீடு அமைந்துள்ள விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் பாஜக சார்பில் இங்கு போட்டியிட்ட தென் சென்னை மாவட்டத் தலைவர் டால்பின் ஸ்ரீதர், வேளச்சேரியில் போட்டியிடுகிறார். இது தொடர்பாக அவரிடம் தமிழிசை பேசியிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.