மதுரை: "மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை" என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளப்படி தென்மதுரையில் யானைகளை பூட்டி நெற்கதிரடிக்கும் அளவிற்கு உழவுத் தொழில் ஒரு காலத்தில் செழிந்து நடந்துள்ளது. யானைகளை பூட்டி நெற் கதிரெடித்த அந்த காலம் போய், தற்போது மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர் ஒருவர், யானையில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர விதவிதமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தவதில் மட்டுமல்லாது, தேர்தல் காலங்களில் பிரச்சாரம், வியூகம் அமைப்பதிலும் மதுரை அரசியல் கட்சியினர் கெட்டிக்காரர்கள். 2009-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில் உருவாக்கப்பட்ட ‘திருமங்கலம் பார்முலா’, தற்போது தமிழகத்தில் எங்கு இடைத்தேர்தல் வந்தாலும் அதே பார்முலாவை பின்பற்றும் அளவிற்கு இந்த தேர்தல் வியூகம் இடைத்தேர்தல் வரலாற்றில் பிரபலமடைந்துவிட்டது. அந்த வகையில் தற்போது மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தால் அரசியல் கட்சியினர் மதுரை மாநகரை திருவிழா கோலமாக்கிவிட்டனர்.
வேட்பாளர்கள், வாக்காளர்களை கவர ஒவ்வொரு நாளும் வித்தியாசமான பிரச்சார முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதனால், மக்களிடம் எளிமையாக சென்று கோரிக்கைகளை சொல்லி வாக்கு சேகரிக்கும் காலம்போய், வாக்காளர்கள் முன் தோப்புக்கரணம் போடுவது, வீதிகளில் தூய்மைப் பணி செய்வது, வாக்காளர்கள் காலில் விழுவது, சாலையோர டீ கடைகளில் வடை சூடுவது, டீ போடுவது, இஸ்திரி செய்வது போன்ற பிரச்சார யுக்திகளை செயல்படுத்துகின்றனர்.
இதில், மதுரை மாநகராட்சி 84-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் போஸ்.முத்தையா என்பவர், குடியிருப்பு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட யானையில் அமர்ந்து சென்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இவரை வரவேற்க வழி முழுவதும் ஆண்கள், பெண்கள் மற்றும் கட்சியினர் திரண்டு நிற்கின்றனர். முக்கிய சந்திப்புகளில் யானையை விட்டு கீழே இறங்கி பெண்கள் எடுக்கும் ஆதரத்தி வரவேற்பை பெற்றுக் கொள்கிறார்.
மீண்டும் யானை மீது ஏறி ஒவ்வொரு முக்கிய வீதிகளிலும் சென்று உதய சூரியன் சின்னத்தை காட்டி வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்கிறார். தேர்தல் வெற்றி விழாவின்போது முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் யானைகளையும், குதிரைகளையும் அழைத்து வந்து ஊர்வலம் செல்வது வழக்கம். ஆனால், தேர்தல் பிரச்சாரத்திலே யானையை அழைத்து வந்து அதில் சென்று வாக்கு சேகரித்தது, மதுரையை மட்டுமில்லாது தமிழக நகர்ப்புற தேர்தல் களத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். யானையில் வலம் வரும் இவரை வாக்காளர்கள், இளைஞர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
வேட்பாளர் போஸ்.முத்தையா ஆதரவாளர்களிடம் பேசியபோது, ‘‘முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி எளிமையாக சென்றுதான் பிரச்சாரம் செய்கிறார். கட்சியினர் சிலர், நேற்று மாலை யானையை அழைத்து வந்து வேட்பாளருக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களை வரவேற்பை ஏற்றுக் கொண்டு சில வீதிகளில் யானையில் சென்று அன்று ஆதரவு திரட்டினார்’’ என்றனர்.