தமிழகம்

நெல் கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை: விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறி யதாவது: நெல் கொள்முதலில் ஏற்பட்டமுட்டுக்கட்டைகள், குளறுபடிகளால் காவிரி டெல்டாவில் ஜனவரி மாத இறுதிக்குள் முடியவேண்டிய அறுவடை பணி 5 லட்சம்ஏக்கரில் தடைபட்டுள்ளது. தற்போது பெய்த பருவம் தவறிய மழையால் சுமார் 3 லட்சம் ஏக்கரில் கதிர்கள் நாசமாகின்றன. இதனால் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

விவசாய உற்பத்திப் பொருளை கொள்முதல் செய்ய மத்திய அரசு கடந்த 2021-22 ஆண்டில் ரூ.4.60 லட்சம் கோடி ஒதுக்கியது. அதை தற்போது 2022-23 ஆண்டில் ரூ.2.60லட்சம் கோடியாக குறைத்துவிட்டது. இதில் ஏற்படும் நிதி நெருக்கடியால் கொள்முதலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அஞ்சுகின்றனர். கொள்முதலில் நிதிச் சுமையை மூடி மறைக்க, நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை கூறி, கொள்முதல் செய்வதை தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழகம், கர்நாடகா ஒப்புக்கொண்டால் மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிப்போம் என்றுநாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். முல்லை பெரியாறில் அணையின் உறுதித் தன்மையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீட் எதிர்ப்பை திசை திருப்ப மத்திய அரசு இவ்வாறு செய்கிறது. இதை எதிர்த்துப் போராட வேண்டும்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, மேகேதாட்டுவில் போராட்டம் நடத்தினோம். பாஜகவுக்கு ஏற்பட்ட எதிர்நிலை தமிழகத்தில் காங்கிரஸுக்கும் ஏற்படும் என்று எச்சரித்தோம். இதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தூண்டுதலின்பேரில், ‘பி.ஆர்.பாண்டியனை கழுத்தை அறுத்து கொலைசெய்வோம்’ என்று வீடியோவில்பதிவிட்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிபி மற்றும் 22 மாவட்ட எஸ்.பி.க்களிடம் விவசாயிகள் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும், இதுவரை காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT