தமிழகம்

பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார் முதல்வர்: தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார் என தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டினார்.

நாகை நகராட்சிக்குட்பட்ட 35 வார்டுகளில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியது:

தமிழகத்தில் 9 மாத திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என பெயர் எடுத்து, ஒட்டுமொத்த மக்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றனர். குறிப்பாக, மீனவ சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வேண்டும் என்ற நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா என யோசிக்க வேண்டும்.

அதேபோல, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக் கடன் தள்ளுபடி என்பன போன்ற வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதேபோல, தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அளித்து வருகிறார். எனவே, அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

பிரச்சாரத்தில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட அவைத் தலைவருமான ஜீவானந்தம், முன்னாள் எம்எல்ஏவும், அமைப்புச் செயலாளருமான ஆசைமணி, நாகை நகரச் செயலாளர் தங்க.கதிரவன், நாகூர் நகரச் செயலாளர் செய்யது மீரான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT