செய்யாறில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.1.50 லட்சம் நேற்று பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
தி.மலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், வாக்காளர்களை ‘கவர’ பணம் மற்றும் அன்பளிப்பு வழங்க வேட்பாளர்களில் சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால், வாகன தணிக்கையை தேர்தல் பறக்கும் படையினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, செய்யாறு பறக்கும் படை அலுவலர் தேவி தலைமையிலான குழுவினர், காஞ்சிபுரம் சாலையில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ் வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் கிராமத்தில் வசிக்கும் சுரேஷ்(38) என்பவர், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1.50 லட்சத்தை கொண்டு சென்றது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணை யில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் பணியாற்றுவதும், சின்ன ஏழாச்சேரியில் உள்ள கல்குவாரியில் வெடி பொருட்களை கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு திரும்பி யதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஆவணம் இல்லாத தால் ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமனிடம் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தேவி ஒப்படைத்தார்.