திருச்சி: திருச்சி மாநகராட்சியின் 5-வது மாமன்றத்துக்காக கூட்ட அரங்கைத் தயார்படுத்தும் பணி இன்று தொடங்கியது.
1866, ஜூலை 8-ம் தேதி தொடங்கப்பட்ட திருச்சி நகராட்சி, 128 ஆண்டுகளுக்குப் பிறகு 1994, ஜூன் 1-ம் தேதி 60 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகருடன் சில பகுதிகள் இணைக்கப்பட்டு 65 வார்டுகளாக மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்கு முதல் முறையாக 1996-லும், அதைத்தொடர்ந்து 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளிலும் தேர்தல் நடைபெற்றது. 2016-ல் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்படி, திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு இதுவரை 4 மாமன்றங்கள் அமைந்துள்ளன.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் பிப்.19-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்.22-ம் தேதியும் நடைபெறவுள்ளது. மார்ச் 2-ம் தேதி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பும் மற்றும் முதல் கூட்டமும், அதைத்தொடர்ந்து, மார்ச் 4-ம் தேதி மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதன்படி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பதவியேற்கவுள்ளனர். இதன் காரணமாக திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கை சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறியது:
”திருச்சி மாநகராட்சியின் 5-வது மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் மார்ச் 2-ம் தேதியும், அதைத்தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி மேயர், துணை மேயர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக மாமன்ற கூட்ட அரங்கு பூட்டிக் கிடந்ததால், உறுப்பினர்கள் அமரும் இருக்கைகளில் உள்ள குஸன்கள் சேதமாகிவிட்டன. இதையடுத்து, மேயர், துணை மேயர், உறுப்பினர்கள் அமரும் இருக்கைகளில் உள்ள குஸன்களை மாற்றிவிட்டு, புதிய குஸன்கள் அமைக்கும் பணியும், கூட்ட அரங்கு மற்றும் இருக்கைகள், மேஜைகள் ஆகியற்றை சுத்தப்படுத்தி, கூட்ட அரங்குக்கு புதிய வர்ணம் பூசும் பணியும் தொடங்கியுள்ளது. இவையுடன் மின்சார பணிகல் உட்பட அனைத்துப் பணிகளையும் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்னதாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.