கரூர் மாநகராட்சி 12வது வார்டான பசுபதிபாளையத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கிருத்திகாவை  ஆதரித்து கரூர் எம்.பி. செ.ஜோதிமணி வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறார். 
தமிழகம்

தேர்தலில் போட்டியிட காசு, பணம் அவசியமில்லை: கரூர் எம்.பி. ஜோதிமணி பிரச்சாரம்

ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: தேர்தலில் போட்டியிட காசு, பணம் அவசியமில்லை என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 3 வார்டுகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பெரியசாமி மனைவி மஞ்சுளா போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையில், இளைஞர் காங்கிரஸை சேர்ந்த கிருத்திகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் மஞ்சுளா சுயேச்சையாக தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு திமுகவின் ஆதரவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மஞ்சுளாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் அவரது மகனான இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் கீர்த்தன் கட்சியில இருந்து நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கிருத்திகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த எம்.பி. செ.ஜோதிமணி மஞ்சுளாவுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கிருத்திகாவுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை பிரச்சாரத்தில் வெளிப்படுத்தினார்.

கரூர் மாநகராட்சி 12வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்து பசுபதிபா¬ ளயத்தில் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி இன்று (பிப். 13ம் தேதி) பிரச்சாரம் செய்து பேசியது, தேர்தலில் போட்டியிட காசு, பணம் அவசியமில்லை. பணக்காரர் வீட்டுக்குள் நாம் செல்ல முடியுமா? காபி, டீ சாப்பிட முடியுமா? சோபாவில் சென்று அமரமுடியுமா?

மக்களை சந்திக்காத, மக்கள் மீது எந்த அன்பும் இல்லாதவர்களுக்கு எவ்வாறு வாய்ப்புக் கொடுக்க முடியும். மக்கள் குரலை கேட்கவேண்டும். மக்களை தேடி செல்லவேண்டும். அதனால்தான் 24 வயதான கிருத்திகாவை பரிந்துரைத்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருத்திகா எளிய குடும்பத்தை சேர்ந்தவர். நேர்மையாக செயல்படுவார்.

காங்கிரஸில் ஒழுங்கீனம் ஏற்றுக்கொள்ளப்படாது. அதனால் தான் கட்சியிலிருந்து ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுயேச்சைக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள். அதிமுவுக்கு போடும் ஓட்டு மோடிக்கு போடும் ஓட்டு. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எம்எல்ஏ, அமைச்சர்கள் மட்டுமே போதும் என இருந்துவிட்டனர்.

நீட் விலக்கு மசோதா கூட்டத்திற்கு பாஜக வரவில்லை. இதையடுத்து அதிமுகவும் வரவில்லை. அதிமுகவை கலைத்து விட்டு பாஜகவில் சேர்த்துவிடலாம். நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்து மத்திய அரசு கல்வி மீது பலமான தாக்குதலை நடத்துகிறது. காங்கிரஸ் வேட்பாளர் நாளை பிரச்சாரத்தில் மக்களிடம் நிதி சேகரிக்கப் போகிறார். அவருக்கு நிதி உதவி அளித்து உதவி செய்யுங்கள் என்றார்.

கிருத்திகாவுக்கு ஆதரவு கேட்டு ஜோதிமணி பிரச்சாரம் செய்தப்போது மஞ்சுளாவின் ஆதரவாளர்கள், திமுகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் ஜோதிமணி செல்லும் வழியில் பதாகைகளுடன் திரண்டு நின்றதால் சிறிது பரபரப்பு நிலவியது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜோதிமணி அந்த பகுதியை கடந்து சென்றதும் அவர்கள் அந்த இடத்தை விட்டு வேறு பகுதிக்கு நகர்ந்தனர்.

SCROLL FOR NEXT