வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சி 99-வதுவார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, இருசக்கரவாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியினர் பண பலம், அதிகார பலம் என எந்த பலத்தை உபயோகித்தாலும், அதை எல்லாம் முறியடித்து பாஜக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.
சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுகநிறைவேற்றவில்லை. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றனர். இதுவரை அதுபற்றி வாய் திறக்கவில்லை. நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
சாத்தியம் இல்லை என்று கூறியதை எல்லாம் மத்திய பாஜக அரசுநிறைவேற்றி வருகிறது. ராமர்கோயில் கட்டப்படுமா என்றனர். தற்போது அதை கட்டி வருகிறோம். காஷ்மீரில் 370-வது பிரிவைநீக்குவார்களா என்றனர். அது நீக்கப்பட்டது. மக்களுக்கு என்னென்ன நன்மை இருக்கிறதோ, அதையெல்லாம் பாஜக அரசு நிச்சயம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
சென்னை கோடம்பாக்கம் மண்டல பகுதிகளில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாநேற்று வாக்கு சேகரித்தார். பின்னர்,தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பகுதியை பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழல் பெருகி, அராஜகம் தலைவிரித்தாடுகிறது. பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 2 நாட்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. உடனடியாக காவல் துறை ஏன் தடயத்தை அழிக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் காவல் துறை மீது சந்தேகம் உள்ளது.
எதிர் கருத்தே இருக்க கூடாதா? நீட் தேர்வுக்கு எதிரானவர் என்றால் கமலாலயத்தில் குண்டு வீசுவாரா? இவ்வாறு செய்பவரை தூக்கிலிட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, சட்டம் ஒழுங்கு சரியில்லை.கடந்த 8 மாதங்களாக திமுகவின்ஆட்சி மக்களுக்கு மகிழ்ச்சியாகஇல்லை. தொல்லியல் ஆய்வாளர் நாகசாமிக்கு அரசு மரியாதை அளிக்க முடியாத அரசு இங்கு ஆட்சியில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.