கோப்புப் படம் 
தமிழகம்

பாஜகவில் இருந்து விலகி கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏவான கு.க.செல்வம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த அவர், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அப்போது திமுகவையும் விமர்சித்து பேசி வந்தார்.

பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல்பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மீண்டும் திமுகவில் இணைந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கு.க.செல்வம் கூறும்போது, ‘‘தமிழகத்தை மத்திய பாஜக அரசு முற்றிலும் புறக்கணிக்கிறது. நீட் தேர்வு, வெள்ள நிவாரண நிதி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து விலகினேன்’’என்றார்.

இந்த நிகழ்வின்போது திமுகபொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதிமுக, பாமக நிர்வாகிகள்

அதிமுக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் புரசை கோ.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், அமமுக சென்னை மத்தியமாவட்ட தலைவர் டி.எஸ்.சேகரன், மாணவர் அணி துணைச் செயலாளர் எஸ்.உதயசூரியன், தேமுதிக மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ரமேஷ் மற்றும் பாமக, தமாகா நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர்.

SCROLL FOR NEXT