பிரச்சாரம் செய்யும் எனது உரிமையை தொடர்ச்சியாக மறுப்பது ஜனநாயக படுகொலை என பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் கடந்த 7-ம் தேதி வேலூர் இப்ராஹிம் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். இந்நிலையில், போத்தனூர் பகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்ற அவரை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர். இதேபோல, அதற்கு முன்பும் பாதுகாப்பு காரணம் என்று கூறி அவரை 2 முறை போலீஸார் கைது செய்தனர். இந்த தொடர் கைது நடவடிக்கை குறித்து வேலூர் இப்ராஹிம் கூறியதாவது:
தீவிரவாதிகளால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், என்னை பிரச்சாரத்துக்கு அனுமதிக்க முடியாது என்ற காரணத்தை கூறி ஒவ்வொரு முறையும் போலீஸார் கைது செய்கின்றனர். தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது என்றால், தீவிரவாதிகளைத்தான் போலீஸார் கைது செய்ய வேண்டும். பிரச்சாரம் மேற்கொள்வது ஜனநாயக உரிமை. பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் நானும் உள்ளேன். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள முறைப்படி கட்சி சார்பில் அனுமதி பெற்றுள்ளோம். கட்சி எந்தெந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொறுப்பு வழங்கியுள்ளதோ அதை நான் செய்து வருகிறேன்.
முதல் 2 நாட்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிக்கு நான் செல்லக்கூடாது என்று தடுத்தனர். பின்னர், நான் எங்கு சென்றாலும் தாக்கப்படுவேன் என்று கூறி பிரச்சாரமே செய்யக்கூடாது என்று தடுத்தனர்.
ஜனநாயக ரீதியாக அனைத்து மக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்ய அனுமதி இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தாலும், பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், நாங்கள் எங்கு சொல்கிறோமோ அங்குதான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் நான் மட்டுமே உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் இல்லை. பிரதமர் மோடி, பாஜகவின் பல்வேறு நிர்வாகிகள் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் உள்ளனர். அவர்களைஎல்லாம் வெளியே எங்கும்செல்லக்கூடாது என அலுவலகத்திலேயே முடக்கி வைப்பார்களா? அல்லது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வெளியே செல்லும்போது முறையான பாதுகாப்பு அளிப்பார்களா?.
மற்ற அனைவரையும்போல எனக்கும் அந்த உரிமை உள்ளது. அதை மறுப்பது என்பது ஜனநாயக படுகொலை. என்னுடைய பிரச்சாரம் மக்களிடையே தாக்கம் ஏற்படுத்தும் என்பதால், என்னைஎப்படியாவது முடக்க வேண்டும்என்ற நோக்கில் இதைச் செய்து வருகின்றனர்.
மேலும், சிறுபான்மையினரின் அடையாளமாக பாஜக உருவெடுத்து வருகிறது என்பதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான், காவல்துறையை வைத்து இந்த கடும் அடக்குமுறையை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.