தமிழக அரசுக்கு கடன் இருப்பது தெரிந்தே பல பொய்யான வாக்குறுதிகளை தேர்தலின்போது திமுகவினர் கொடுத்தனர். மக்களை ஏமாற்றுவதில் முதன்மையான கட்சி திமுக, என சேலத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, மல்லூர், ஆட்டையாம்பட்டி, சங்ககிரி உள்ளிட்ட பேரூராட்சிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:
தேர்தல் நோக்கத்தையே திமுக-வினர் சிதைக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 525 அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவித்தார்.ஆனால், எதையும் செய்யவில்லை.
‘தமிழக அரசுக்கு கடன் சுமை இருப்பதால் தேர்தலில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை’ என்று திமுக-வினர் கூறுகின்றனர். ஆனால், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுக்கு கடன் இருக்கிறது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
கடன் இருப்பது தெரிந்தே பல பொய்யான வாக்குறுதிகளை தேர்தலில் கொடுத்தனர். மக்களை ஏமாற்றுவதில் முதன்மையான கட்சி திமுக.
அதிமுக அரசில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம். ரூ.12,110 கோடி பயிர்கடனை தள்ளுபடி செய்தோம். ஆளுங்கட்சி எந்த தவறு செய்தாலும் சட்டப்பேரவையிலும், வெளியேயும் துணிச்சலோடு சவால்விட்டு அதனை சுட்டிக்காட்டி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏ., ராஜமுத்து, முன்னாள் எம்எல்ஏ மனோன்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.