மதுரை மாநகராட்சி தேர்தலில் பாஜக 3 இஸ்லாமியர்களையும், 2 கிறிஸ்தவர்களையும் வேட்பாளர் களாக நிறுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் நூறு வார்டுகளிலும் பாஜக போட்டியிடுகிறது. இவர்களில் 3 பேர் இஸ்லாம் மதத்தினர். அதில் 2 பேர் பெண்கள்.
22-வது வார்டு பாஜக வேட்பாளர் காசிபா சையது(25), பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர். பாஜகவில் 2018-ல் சேர்ந்தார். அவர் கூறியதாவது: பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் பார்வை நாட்டின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது. ஆனால் பாஜக குறித்து தவறாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
நான் பாஜகவில் தனிப்பட்ட முறையில் எந்த பாகுபாட்டையும் பார்க்கவில்லை. தேர்தலில் எனக்கு ஆதரவாக அனைத்து மதத்தினரும் பிரச்சாரம் செய்கின்றனர் என்றார்.
54-வது வார்டில் போட்டியிடும் மெகருன்னிசா(36), பிளஸ் 2 வரை படித்துள்ளார். சமூக சேவகர். அவர் கூறுகையில், பாஜகவில் அனைத்து மதத்தினரும் சமமாக பார்க்கப்படுகின்றனர். பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியல்ல. இருப்பினும் பாஜகவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிம்பத்தை கீழ்மட்ட அளவில் கடுமையாக உழைத்து அகற்ற வேண்டும். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன என்றார்.
36-வது வார்டில் போட்டியிடும் பஷீர்அகமது(50) கூறுகையில், நான் பத்து ஆண்டுகளாக பாஜகவில் உள்ளேன். ஹிஜாப் விவகாரத்தின்போது ஓட்டு கேட்டு சென்றபோது இஸ்லாமியர்கள் சிலரின் எதிர்ப்பை சந்தித்தேன். அவர்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள் என்றார்.
இவர்களை தவிர 2 கிறிஸ்தவர்களையும், திருநங்கை ஒருவரையும் பாஜக வேட்பாளர் களாக நிறுத்தியுள்ளது.