தமிழகம்

திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் மக்கள்; தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது: முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கருத்து

செய்திப்பிரிவு

திருவாரூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து பேசியது:

தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், விளம்பர அரசியல் செய்து வருகிறது. பொங்கல் பரிசாக பணம் வழங்காதது மட்டுமில்லாமல், வழங்கிய பொருட்களிலும் தரம் குறைவாக இருந்தது என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி ஆகியவற்றிலும் நடைபெற்றுள்ள குளறுபடிகளால் பொதுமக்கள் திமுக அரசு மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கு மாற்றாக அதிமுகவின் உண்மையான மக்கள் பணியை பொதுமக்கள் நினைவுகூருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் பாப்பாத்தி மணி, நகரச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட பாசறைச் செயலாளர் கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர்கள் சேகர், மணிகண்டன், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT