ஜவ்வாதுமலைக்கு திரும்பிய ஒற்றை கொம்பு யானை. 
தமிழகம்

ஜவ்வாதுமலைக்கு திரும்பிய ஒற்றை கொம்பு யானை: கண்காணிப்பை தீவிரப்படுத்திய வனத்துறையினர்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு மீண்டும் திரும்பிய ஒற்றை கொம்பு யானையின் நட மாட்டத்தை வனத்துறையினர் கண் காணித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைக்கு யானைகள் கூட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தன. அதில் இரு யானைகள் இறந்துவிட, மேலும் பல யானைகள், தண்டராம்பட்டு வனப் பகுதியில் புகுந்தன. பின்னர், அந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், முதுமலை கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த யானை கூட்டத்தில் பிரிந்த ‘ஒற்றை கொம்பு’ ஆண் யானை, ஜவ்வாது மலையில் தஞ்சமடைந்தது. அங்கு விளையும் பலா உள்ளிட்ட இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொண்டு மக்களுடன் இணைந்து வாழ தொடங்கியது. ஒற்றை கொம்பு யானையால் பாதிப்பு இல்லாததால் மக்களும் அச்சமின்றி வாழ்ந்து வந்தனர். யானைக்கு கண் பார்வை குறைவாக உள்ளதால், சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் வாழ்ந்தது.

இதற்கிடையில் ஜவ்வாதுமலையில் இருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வெளியேறிய ஒற்றை கொம்பு யானை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. அதன்பிறகு யானையின் நடமாட்டம் குறித்து வெளி உலகுக்கு தெரியவில்லை.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஒற்றை கொம்பு யானை, ஜவ்வாதுமலைக்கு மீண்டும் திரும்பியுள்ளது. ஜமுனாமரத்தூர் கிராமத்தில் இருந்து ஆலங்காயம் நோக்கி நேற்று முன்தினம் சென்ற அரசு பேருந்தை, ஒற்றை கொம்பு யானை வழிமறித்துள்ளது.

பின்னர், பேருந்து உள் பகுதியில் தனது தும்பிக்கையை நுழைத்து பிளறிய யானை, பேருந்தை அமைதியாக கடந்து, வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனால் சிறிது நேரம் பதற்றமாக இருந்த பயணிகள், பேருந்தை அமைதியாக யானை கடந்து சென்றதும் நிம்மதி அடைந் துள்ளனர். இதற்கிடையில், ஒற்றை கொம்பு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT