நூற்றாண்டு சிறப்புகள் கொண்ட கைத்தறி புகழ் குடியாத்தம் நகராட்சியை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே பெரியளவில் போட்டி ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மிகவும் பழமையான நகராட்சிகளில் ஒன்று குடியாத்தம். கடந்த 1886-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சி யாக தொடங்கி 1973-ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 1.25 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராட்சியில் 36 வார்டுகளில் ஆண்கள் 40,820 பேர், பெண்கள் 44,605, மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேர் என மொத்தம் 85,432 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
குடியாத்தம் நகரம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புகள் கொண்டது. சோழர்கள் ஆட்சியில் இந்தப் பகுதி ஜெயகொண்ட சோழ மண்டலமாகவும், ஜெயகொண்ட சதுர்வேதி மங்கலமாகவும் இருந்துள்ளது. கைத்தறி, தீப்பெட்டி, பீடி தொழில் நகரின் தொழில் அடையாளமாக விளங்குகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியை தயாரித்து அனுப்பிய நகரம் என்ற பெருமையும் குடியாத்தம் தன்னகத்தே கொண்டுள்ளது.
சுமார் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நகரை கிழக்கு நோக்கி பாயும் கவுன்டன்யா மகாநதி வடக்கு, தெற்காக பிரிக்கிறது. நகரின் முன்னணி தொழிலான கைத்தறி லுங்கிகள் ஆப்பிரிக்கா, வளைகுடா நாடு களுடன் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது. வரலாற்று சிறப்புடன் நூற்றாண்டுகள் கடந்த நகராட்சியின் தேர்தல் களத்தில் நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொது பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாறியுள்ளது.
திமுக, அதிமுக என சமபலத் துடன் மோதும் தேர்தல் களமாக இருப்பதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் பந்தயத்தில் திமுகவில் நகர பொறுப்பாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் அரசு, கோபாலகிருஷ்ணன் ஆகி யோரும், அதிமுகவில் மாயா பாஸ்கர், முன்னாள் நகராட்சி தலைவர் அமுதா சிவப்பிரகாசம் ஆகியோரும் உள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பு எதிர்வரும் நகராட்சியை கைப்பற்றும் கட்சிக்கு சவாலாக மாறியுள்ளது. ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி யுள்ள கவுன்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. விசாலமாக காட்சியளிக்கும் ஆற்றை பாதுகாப்பதுடன் நகரின் கழிவுகள் ஆற்றில் கலக்காமல் இருக்க பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக உள்ளது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைமுறைப்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் வழங்க வேண்டும்,நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு கெங்கையம்மன் கோயில் அருகே உயர்மட்ட பாலத்துடன் தங்கம் நகர் பகுதியில் ஆற்றை கடக்க மாற்று தரைப்பாலம் அமைக்க வேண்டும், உள்ளி மற்றும் எர்த்தாங்கல் கிராமத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பையை தரம் பிரித்து அகற்ற வேண்டும்.
குடியாத்தம் நகரின் பிரதான அடையாளமான ஜவுளி பூங்கா அமைக்க ஜவுளி முதலாளிகளுடன் ஒருங்கிணைப்பு பணியை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட நூற்றாண்டுகள் பழமையான மார்க்கெட் பகுதியை இடித்துவிட்டு வாகன நிறுத்துமிட வசதியுடன் கூடிய நவீன வணிக வளாகமாக கட்ட வேண்டும். சந்தப்பேட்டை சந்தை யில் நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும்.
பேருந்து நிலையம் விரிவாக் கத்துக்கு மாற்றுத் திட்டம், லட்சுமி திரையரங்கம் அருகில் உள்ள நகராட்சி பூங்காவை புனரமைக்க வேண்டும், பேருந்து நிலையம் அருகில் புறநகர் ஆட்டோக்களுக்கு தனி நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். நகராட்சி ஆணையாளர் குடியிருப்பு வளா கத்தில் கட்டப்பட்டு ஓராண்டு களுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருக்கும் இரவு நேர தங்கும் விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் பிரதானமாக உள்ளது.