தமிழகம்

வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுகிறோம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து

செய்திப்பிரிவு

தேர்தலில் வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுகிறோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

மக்களை நம்பித்தான் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினோம். பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம். ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தோற்றுப் போகவில்லை. மக்கள்தான் தோற்றுப் போகின்றனர்.

நாங்கள் வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுகிறோம். அதனால் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை,

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் சம்பவம் நடக்காது. அரசியல் சாசனத்திற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆனால், அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. பண்ணாரி - திம்பம் சாலையில் இரவு நேர போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த தடையை விலக்க வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT