தமிழகம்

பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படாததால், இங்கு வாகனங்களை நிறுத்த முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

சென்னையில் மின்சார ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ரயில் நிலையங்களுக்கு தங்கள் சொந்த வாகனங்களில் சென்று, அங்குள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதற்காக ரயில் நிலைய வளாகத்தில் வாகன நிறுத்துமிட வசதி செய்யப்படுகிறது.

எனினும், சில ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்தை நிர்வகிக்கும் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுவதால், வாகன நிறுத்துமிடங்கள் செயல்படாமல் இருக்கின்றன.

குறிப்பாக, பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்யாததால், வாகனங்களை நிறுத்த முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறும்போது, ‘‘பயணிகள் இருசக்கர வாகனங்களில் வந்து, இங்கு அவற்றை நிறுத்திவிட்டு, பல்வேறு இடங்களுக்கு ரயில்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக, பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் மட்டும் தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

ஆனால், இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்கும் புதிய ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படவில்லை. ஓராண்டுக்கும் மேலாக இந்த நிலை நீடிக்கிறது. போலீஸார் இந்த வளாகத்தில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றனர். அப்படியெனில், இந்த ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் எங்குதான் வாகனத்தை நிறுத்துவது?.

எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் வாகனங்களை நிறுத்திச் செல்வதால், வாகனத் திருட்டு, உதிரி பாகங்களைத் திருடிச் செல்வது போன்ற சம்பவங்கள் நேரிடுகின்றன. எனவே, இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தை முழுமையாக செயல்பட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கரோனா பாதிப்பு இருந்ததால், புதிய ஒப்பந்தாரரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது டெண்டர் வெளியிடப்பட்டு, புதிய ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் பேசின்பிரிட்ஜ் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு புதிய ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்படுவார்’’ என்றனர்.

SCROLL FOR NEXT