தமிழகம்

சமூக வலைதளங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்: மதிமுக வேட்பாளர்களுக்கு துரை வைகோ அறிவுரை

செய்திப்பிரிவு

மதிமுக வேட்பாளர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

மதிமுக திருச்சி மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி- கரூர் பைபாஸ் சாலையிலுள்ள மண்ணச்சநல்லூர் நடராஜன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பேசியதாவது:

மதிமுகவினர் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட வேண்டும். தற்போது தேர்தல் நேரம் என்பதால், மதிமுக வேட்பாளர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட வாக்காளர்களை இணைத்து வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பித்து, அதன் வழியாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். இனி சமூக வலைதளங்கள் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் இல்லை. எனவே, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது அந்த மதத்தின் உரிமை. பெண் கல்வியை கெடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக கூட்டணியில், கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய சீட்டுகள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கும் இருக்கிறது. வாக்கு அரசியலை தாண்டி மக்களுக்காக செயல்படுகின்ற இயக்கம்தான் மதிமுக. நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் வர வாய்ப்பில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்’’ என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு (மாநகர்), டிடிசி சேரன் (வடக்கு), மணவை தமிழ்மாணிக்கம்(தெற்கு) உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT