தமிழகம்

விளம்பரங்கள், தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க முன் அனுமதி பெறுவது எப்படி? - மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரங்களை வெளியிடவும், தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்கவும் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

மேற்குறிப்பிட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் மாநில அளவில் வெளியிடப்படும் விளம்பரங்களை வெளியிடுவதற்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் விண்ணப்பம் செய்து முன்அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் உத்தேசிக்கப்பட்டுள்ள அவ்விளம்பர மாதிரியின், இரண்டு நகல்களோடு உரிய முறையில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாவட்ட அளவில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளம்பரம் எண் மற்றும் நாள் ஆகியவை விளம்பரப் பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தற்காலிக தேர்தல் அலுவலகம்: அரசியல் கட்சிகளிடமிருந்து வேட்பாளர்களின் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்தல் தொடர்பாக கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டமன்றத் தேர்தலின்போது கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களால், தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கரோனா நடைமுறைகளை பின்பற்றிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SCROLL FOR NEXT