திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 47-வது வார்டு பகுதி மக்கள் ’ஓட்டுக்கு பணம் வேண்டாம், ரோட்டுக்கு தரம், ஓடைக்கு சுகாதாரம் வேண்டும்’ என சாலையில் வேட்பாளர்களின் கவனத்திற்காக எழுதிய வாசகங்கங்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி காலை, மாலை என பிரச்சாரத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே, திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 47-வது வார்டில் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 5 பேர் போட்டியில் உள்ளனர்.
இந்த நிலையில், 47-வது வார்டுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள சாலையில் ஓட்டுக்குப் பணம் வேண்டாம், ரோட்டுக்குத் தரம், ஓடைக்கு சுகாதாரம் வேண்டும் என எழுதப்பட்ட வாசகங்கள் மக்களின் கோரிக்கையாக வேட்பாளர்களை வரவேற்கின்றன. ஓட்டுக்குப் பணம் வேண்டாம், அடிப்படை வசதிகள்தான் செய்து தரவேண்டும் என உறுதியுடன் கூறும் 47-வது வார்டு பகுதி வாக்காளர்களின் அறிவிப்பு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.