மதுரை: மதுரை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக முன்நிறுத்தும் மேயர் வேட்பாளர் யாரென்று தெரியாமல், அக்கட்சியினரே குழப்பமடைந்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சித் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்தபோது, தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே அக்கட்சியில் மேயர் வேட்பாளருக்கு கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தரப்பினருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அப்போதும் இதுபோல் மேயர் வேட்பாளர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், இருவர் வீட்டு குடும்ப உறுப்பினர்களை மேயர் வேட்பாளராக முன்நிறுத்துவதற்கு திரைமறைவு போட்டிகள் நடந்தது. அதனால், தற்போது திமுக ஆட்சியில் மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பா குடும்பத்தில் இருந்து மேயர் வேட்பாளரை குறிவைத்து கவுன்சிலர் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என கட்சியினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், ஆளும்கட்சியாக அதிமுக இல்லாததால் அவர்கள் தங்கள் குடும்பத்தினரை கவுன்சிலர் வேட்பாளராக முன்நிறுத்தவில்லை. அவர்களைப் பின்பற்றி இவர்களுக்கு அடுத்தகட்ட முக்கிய நிர்வாகிகளும் தங்கள் குடும்பத்தில் இருந்து மேயர், துணை மேயர் கனவோடு யாருக்கும் கவுன்சிலர் 'சீட்' கேட்கவில்லை. இவர்கள் வழக்கமாக தங்கள் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டாலும் மாநகராட்சி நிர்வாக பொறுப்புகளில் ஏதாவது ஒரு பதவியை கைப்பற்றுவதற்காக குடும்ப உறுப்பினர்களுக்கு 'சீட்' கேட்டு மாவட்ட செயலாளர்களுக்கும், கட்சித் தலைமைக்கும் நெருக்கடி கொடுப்பார்கள். இந்த முறை கவுரவமாக விலகி கொண்டதுபோல் தேர்தல் பார்வையாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பின்னால் தேர்தல் பணிகளில் வலம் வருகின்றனர்.
பெரும்பான்மை வார்டுகளை அதிமுக கைப்பற்றினாலும் மறைமுக தேர்தலில் மேயர் தேர்தலில் திமுகவை எதிர்த்து வெற்றிப்பெறுவது கடினம் என்பதால் அவர்கள் இந்த மேயர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. அதனால், மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவியை குறிவைத்து யாரை முன்நிறுத்துவது தெரியாமலே மாநகர அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 100 வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில், அதிமுக வெற்றிபெற்றால், முன்னாள் மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர்கள் சுகந்தி அசோக், சண்முகப்பிரியா ஹோசிமின் ஆகியோர்களில் ஒருவருக்கே மேயர் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சியினர் கூறுகின்றனர்.
இவர்கள் மூவருமே முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவின் ஆதரவாளர்கள். இவர்களில் சண்முகவள்ளி கடந்த அதிமுக மாநகராட்சி நிர்வாகத்தில், மண்டலத் தலைவராக இருந்தவர். சுகந்தி கவுன்சிலராக வெற்றிபெற்று, மாநகராட்சியில் கல்விக்குழுத் தலைவராக இருந்தவர். முன்னாள் கவுன்சிலர் சண்முகப்பிரியா ஹோசிமின், மகளிரணியில் இருப்பவர். செல்லூர் கே.ராஜுவின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் மூவருமே கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்று மறைமுக மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளராகுவதற்கு காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
மறைமுக தேர்தலில் வெற்றியோ தோல்வியோ கண்டிப்பாக அதிமுக வேட்பாளர்களை நிறுத்தும். அப்படி மேயர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் கட்சியில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இந்த மேயர் வேட்பாளர் பதவி துருப்புச் சீட்டாக இருக்கும் என்பதால் இவர்கள் மூவர் மட்டுமில்லாது வெற்றிவாய்ப்புள்ள சில கவுன்சிலர்களும் மேயர் வேட்பாளராகுவதற்கு தீவிர முயற்சி மேற்கொள்கின்றனர். ஆனால், வி.வி.ராஜன் செல்லப்ப தரப்பினரோ, தன்னுடைய புறநகர் கிழக்கு மாவட்டத்தில் வெறும் 29 வார்டுகள் மட்டுமே வருவதால் மேயர் வேட்பாளர் தேர்வை மாநகர அதிமுக செயலாளர் செல்லூர் கே.ராஜுவிடம் பெரும்தன்மையாக விட்டுக்கொடுத்ததாக கூறி வருகின்றனர்.