சென்னை: ஓபிஎஸ்ஸின் உதவியாளர் முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கனிமவள மற்றும் வருவாய் துறையை சேர்ந்த 11 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவி்ல், ‘‘தேனி மாவட்டம் வட வீரநாயக்கன்பட்டியில் அரசு நிலங்களில் இருந்து உரிய அனுமதி பெறாமல் ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மணலை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அன்னபிரகாசம் உள்ளிட்டோர் முறைகேடாக எடுத்துள்ளனர். அதன்பிறகு அந்த அரசு நிலங்கள் தனியார் சொத்துக்களாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் உடந்தை. எனவே லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கோரியிருந்தார்.
நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கனிம வளத் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள், வருவாய்துறையை சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் ஒரு தனி நபர் என மொத்தம் 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.