கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை கொல்ல முயற்சி நடந்தது தொடர்பாக 2 டிஐஜி-க்கள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். பத்திர எழுத்தர். கடந்த 25-ம் தேதி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த அவர், ஒருவர் தன்னை மிரட்டி, ஒரு பையைக் கொடுத்து எஸ்.பி. அலுவலகத்தில் வைக்குமாறும், அவ்வாறு வைக்காவிட்டால் தன்னையும், எஸ்.பி.யை யும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார் என்றும் அங்கிருந்த போலீஸாரிடம் தெரிவித்தார்.
அவர் வைத்திருந்த பையைச் சோதனையிட்டதில், அதில் பலூன்களை சுடப் பயன்படுத்தப்படும் விளையாட்டுத் துப்பாக்கி (ஏர் கன்) இருந்தது தெரியவந்தது. பசுபதிபாளையம் போலீஸார் அந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர். இதற்கிடையில், காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, தற்கொலைக்கு முயன்றதாக வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் தவிர, மற்ற 2 நுழைவாயில்கள் மூடப்பட்டன. வெங்கடேசனிடம் துப்பாக்கி கொடுத்தனுப்பிய நபரின் உத்தேச வரைபடத்தை கணினி மூலம் வரைந்து, அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி சரக டிஜஜி அருண் மற்றும் காவல்துறையின் தேர்தல் பார்வையாள ரான டிஐஜி அகுன் சபர்வால் ஆகியோர், கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே மற்றும் போலீஸார், அலுவலக ஊழியர்களிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர். எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.