அதிமுக பாஜகவின் ஒரு முகமாகத்தான் செயல்படுகிறது என கனிமொழி எம்.பி. கூறினார்.
விருதுநகர் நகராட்சி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் கொடுத்த ஆதரவால் இப்போது நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. திமுக ஆட்சியில் ரூ.1.43 லட்சம் கோடிக்கும் மேலாக தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. விரைவில் தொழிற்சாலைகள் தொடங் கப்படும். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
பாஜகவுக்கு ஒரு ஓட்டு விழுந்தாலும் ஒரு பெரிய பால் குடத்தில் ஒரு துளி விஷம் விழுவது போல ஆகும். பாஜகவுடன் உள்ளாட்சியில் கூட்டணி கிடையாது, ஆனால், மத்தியில் கூட்டணி வைத்துள்ளோம் என்று கூறும் அதிமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை, இருவரும் ஒன்றுதான். அதிமுக பாஜகவின் ஒரு முகமாகத்தான் செயல்படுகிறது.
மக்களுக்காகப் பாடுபடும் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும், என்றார்.