சென்னை: 'ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில் கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்புக் கலகங்கள் நடைபெறுவது, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை திரட்டுவது என்ற பாஜகவின் மதவெறி அரசியல் சதியின் ஒரு பகுதியாகவே காண முடிகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா மற்றும் புர்கா உடைகள் அணிய தடை விதிக்க வேண்டும் என்ற பெயரில் கர்நாடக மாநிலத்தில் இந்து மதவெறிக் கும்பல் கலகங்களில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில் கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்புக் கலகங்கள் நடைபெறுவது, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை திரட்டுவது என்ற பாஜகவின் மதவெறி அரசியல் சதியின் ஒரு பகுதியாகவே காண முடிகிறது. பாஜகவின் இந்த மலிவான தேர்தல் ஆதாயம் தேடும் நடவடிக்கையில் முஸ்லிம் பெண்களின் ஆடை அரசியல் அடையாளமாக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டம் நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் மதத்தின் மீது நம்பிக்கை வைக்க, அதனை வணங்கி, வழிபட முழு உரிமை வழங்கியுள்ளது. இந்த அடிப்படை உரிமையில் வேறு எவரும் தலையிட்டு, இடையூறு செய்யவோ, தடுக்கவோ வேறு எவருக்கும், அரசுக்கும் உரிமை இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளது. ஆனால், பாஜக ஒன்றிய அரசின் அணுகுமுறை அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து, வெகுதூரம் விலகி சென்றுள்ளது. “இந்து ராஷ்டிரம் “ என்ற கற்பிதக் கருத்தை பலவந்தமாக கட்டமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை பல்வேறு நிகழ்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன. அது தற்போது கர்நாடக மாநிலத்தில் தீவிரமாக செயல்படுகின்றது.
கர்நாடக மாநில அரசு பாஜக தலைமையில் செயல்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நெஞ்சில் மதவெறி நஞ்சு கலந்து, நாட்டை ரத்தக்களரியில் தள்ளும் கலவரங்களை அனுமதித்து வருகிறது. ஒரு மாணவியை நூற்றுக்கணக்கான மாணவர்கள் சூழ்ந்துகொண்டு “ஜெய்ஸ்ரீராம்“, பாடசாலைகளில் உள்ள கொடிக் கம்பங்களில் காவிக் கொடி ஏற்றி கூச்சலிடுவதும், இந்த வன்முறை நிகழ்வுகளை மாநில அமைச்சர்கள் நியாயப்படுத்தி பேசி வருவதும், இருபதாம் நூற்றாண்டில் மனிதகுல விரோதி, பேரின வெறியன் ஹிட்லர் கடைப்பிடித்த, ஜனநாயக அழித்தொழிப்பு நடவடிக்கையின் இந்திய வடிவமாக வெளிப்படுகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற வாழ்க்கை நெறி பண்பாட்டுக்கும் எதிராக மதவெறி அரசியல் நடத்தி வரும் பாஜகவின் மலிவான நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை பேணும் பண்புக்கும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக செயல்படும் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து மதவெறிக் கும்பல்களுக்கு எதிராக மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி, தேச பக்த சக்திகள் ஓரணியில் திரண்டு போராட முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.