புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவருக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதாக கூறுப்படும் விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக மதக் கலவரத்தை தூண்ட காங்கிரஸ், திமுக முயற்சிக்கிறது என புதுச்சேரி அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் ஹிஜாப் அணிந்து வர ஒரு மாணவிக்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்தாக கூறப்படுகிறது. அதையடுத்து, இதுபற்றி சமூக அமைப்பினர் விசாரித்தபோது, அனைவரும் ஒரே மாதிரி சீருடை அணிய அறிவுறுத்தியதாகவும், உள்நோக்கமில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து, சமூக அமைப்பினர் சார்பில் முதல்வர், கல்வியமைச்சரிடம் மனு தரப்பட்டது. ஹிஜாப் விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலர் அன்பழகன் கூறியது: "அரியாங்குப்பம் பள்ளியில் ஹிஜாப் சம்பந்தமான சாதாரணமான பிரச்சினையை திமுக எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்து மனு அளித்து மதரீதியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமியும், மதவாத சக்திகள் தலைதூக்கி உள்ளதாக பொறுப்பற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
அரசியல் ஆதாயத்துக்காக புதுவையில் மதக் கலவரத்தை துாண்டும் முயற்சியில் திமுக, காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆட்சியில் காங்கிரஸ் - திமுக இருந்தபோது வக்பு வாரியத்தையே இவர்கள் புறக்கணித்திருந்தனர். அமைதி தவழும் புதுச்சேரியில் திட்டமிட்டு மத கலவரத்தை துாண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும்" என்று அன்பழகன் கூறினார்.