தமிழகம்

மத உணர்வுகளை அனைவரும் மதிக்க வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஹிஜாப் விவகாரத்தில் மத உணர்வுகளை அனைவரும் மதிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

உள்ளாட்சியில் நல்லாட்சி காணப்படும் என்ற நிலையில், அதிமுக-தமாகா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஹிஜாப் விவகாரத்தில், மத உணர்வுகளை அனைவரும் மதிக்க வேண்டும். இதில் கட்சி, அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது. நீட் விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்களுடைய விருப்பு வெறுப்புகளை தாண்டி, அரசியல் விருப்பு வெறுப்பாக மாறியுள்ளது வேதனை அளிக்கிறது. இவ்விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளின் மாறுபட்ட கருத்துகளுக்கிடையே ஒரு இறுதியான முடிவு எட்டப்பட வேண்டும் என எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடந்து தாக்குவது, படகுகளை ஏலம் விடுவது என்பது போன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT