மதுரை: நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 5 சவரன் விவசாய நகைக்கடனை தள்ளுபடி செய்து 2021 நவம்பர் 1-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. நகைக்கடன் தள்ளுபடியால் அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும். கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் முறையாக வட்டி செலுத்தாதவர்களுக்கும் தள்ளுபடி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் நகை அடமான கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடைபெற்றிருப்பதாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே விவசாய நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்து, அதை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் பரேஷ் உபாத்யா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்து, மனுதாரர் கோரிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.